February 1, 2013

ஜோதிடத்தின் பாதை – 2

பதிவு - 11

(நன்றி : மலாக்கா முத்துகிருஷ்ணன்)

          சகுனத்தைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் சுவாரஸ்யமான பல விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது.
     பழங்காலத்தில் மனிதர்கள் தங்களின் அடுத்தடுத்த செயல்களுக்கெல்லாம் சகுனங்களையே அடிப்படையாக கொண்டிருந்தார்கள்.
     சகுனம் என்கிற வார்த்தை இப்போது ஏளனமாக சொல்லக்கூடிய அளவில் தான் இருக்கிறது. அதுவும் பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் கேலி செய்வது ஃபாஷன் மாதிரி ஆகி விட்டது. மூட நம்பிக்கைக்கும் அடிப்படை அனுபவத்திற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது.
     ஒவ்வொரு சகுனத்திற்கும் அடிப்படைச் செய்திகள் இருக்கின்றன. ஒரு செயலைப்பார்த்து மற்றொன்றைத் தீர்மானிப்பது என்பது அறிவியலுக்கு ஒப்பானது அல்லவா?
     உலகத்தில், எதையும் பார்க்காமல் வருங்காலத்தைப் பற்றி கற்பனையில் முடிவு செய்யும் பல கலைகள் உள்ளன.  அவற்றிற்கிடையே தாங்கள் கண்ட செயல்களின் அடிப்படையில் திரும்பவும் அந்தச் செயல் நடைபெறுமானால் அவற்றின் முடிவு இப்படித்தான் இருக்கும் என அனுபவ ரீதியாக சொல்வது எப்படி கேலிக்கு உரியதாக இருக்கும்.
     ஜோதிடத்தில், ப்ரசன்ன ஜோதிடம் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு சகுனம் மட்டுமல்லாமல் நிமித்தம் என்ற ஒன்றையும் பார்த்து ஆராய்ந்தாலே நமக்கு சரியான விடை கிடைக்கும். சகுனத்திற்கும், நிமித்தத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு செயல் ஆரம்பிப்பதற்கு முன்னால், அல்லது செயலைச் செய்ய போகும் போது நாம் பார்க்கும் விஷயம் கேட்கும் விஷயங்கள் சகுனம் என்று சொல்லலாம்.  ஒரு செயல் நடந்து கொண்டு இருக்கும் போது தானாக ஒரு விஷயம் நடந்தால் அது நிமித்தம்.
     காலம் நமக்கு சில குறிப்புகளை தந்து கொண்டே இருக்கிறது. அதை சரியான படி புரிந்து கொண்டால் போதும் பல பிரச்சனைகள் தானாக சரியாகும், நாம் தேடும் விடையும் கிடைக்கும்.
      ப்ரசன்ன ஜோதிடம் பற்றி எழுதும் போது அதைப்பற்றிய தகவல்களைக் கூறுகிறேன்.
     எனவே, சகுனச் சாத்திரம் என்பது இயற்கையைப் பார்த்து அதன் போக்கில் அடுத்து என்ன நடக்கும் என ஏற்கனவே கண்ட அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஒரு கலை எனலாம்.
     பிருகத் சம்ஹிதை என்னும் பழைய நூல் ஒன்றில் அதன் 86 ஆவது இயல் முதல் 96 ஆவது இயல் வரை உள்ள 11 இயல்களில் சகுனங்களின் அடிப்படையில் அறியக் கூடிய பலன்கள் பற்றி எழுதப் பட்டுள்ளது.
     .நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இதைப் படித்து விட்டு, செயற்கையாக சில சகுனங்களை ஏற்படுத்திக் கொண்டு ஆஹா நமக்கு சக்ஸஸ் தான் என்று எண்ண வேண்டாம்.  ஸாரி. . .  அதற்கெல்லாம் எந்தப் பலனும் கிடைக்காது.
     இப்படித்தான் நண்பர் ஒருத்தர் வீட்டிற்கு வந்திருந்தார்.
      ஏம்ப்பா உள்ளங்கை அரிச்சா காசு வரும்னு சொல்றாங்களே அது உண்மையா என்றார்.
     பொதுவா சொல்றதுண்டு. கால் அரிச்சா பிரயாணம் இருக்குன்னு சொல்வாங்க, சாப்பிடற தட்டு நகர்ந்தா அடுத்த வேள வேற இடத்துல சாப்பிடப் போறொம்னு சொல்வாங்க அது மாதிரிதான் இதுவும். ஏன் கேக்குற
    இல்லப்பா... ரெண்டு நாளா கை நம நமங்குது நமக்கு யார் காசு தருவாங்கன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்
    இது காசு வர்ற நமச்சல் இல்ல காசு செலவழிக்கற  நமச்சல். மொதல்ல நல்ல ஸ்கின் டாக்டரப் போய் பாரு என்று கூறினேன்.




பயணம் தொடரும்……


No comments: