December 26, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 7

பதிவு ... 8



(Pic : Thanks to wikipedia)

   வாசன் பஞ்சாங்கத்தின் பின் அட்டை உள் பக்கத்தில் உள்ள ஒரு குறிப்பை நாம் காணலாம்.  சூரியனும், சந்திரனும், பூமியும்  ஆகர்ஷண சக்தியால் ஒன்றுக்கொன்று இழுக்கப்படுகிறது. அதனால் சந்திரனின் பாதையில் அவ்வப்போது வித்தியாசம் ஏற்படும் இந்தக் கதி பேதத்தை வாக்கிய பஞ்சாங்கத்தில் சேர்ப்பதில்லை என்றும், இதனால் 17 நாழிகை வரை வித்தியாசம் வருகிறது இதனை கவனித்து கோவில் தேவஸ்தான அதிகாரிகள் மக்களுக்குச் சரியான விரதாதிகளை அனுஷ்டிக்க வகை செய்யும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
      கோள்களின் ஆகர்ஷண நிலையால் வானில் சிறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இதனை பீஜ சம்ஸ்காரம் செய்து அதாவது திருத்தம் செய்து பயன்படுத்தினால் அது திருக்கணித பஞ்சாங்கம் ஆகும்.
 
 ஜோதிட உலகில், ஆரம்பத்தில் வான சாத்திரம் ஆராயப்பட்ட போது, த்ருக் எனும் பார்வையினால் கண்டறிந்து, சரியான கணக்கீடுகளுடன் கிரக அமைப்புகள் தரப்பட்டன.
  பின் வாக்கியம் முறை உருவானது.
 இறுதியாக மீண்டும் திருக்கணித முறையே உருவாகியுள்ளது.
     
     பஞ்சாங்கம் பற்றிய இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.
காஞ்சி மடத்தில் ஆரம்பத்தில் வாக்கிய கணிதம் பின் பற்றப்பட்டு வந்தது. தற்போது திருக்கணித முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. 
     மக்களுக்கு சரியான கணித முறையைத் தர வேண்டியது ஜோதிடர்களின் கடமை. அனைவரும் ஒன்று பட்டால் தான் ஜோதிட சாத்திரம் வளரும்.
 (இது கோவை கற்பகம் பல்கலைக்கழக கருத்தரங்கில் திரு.சுந்தர்ராஜன் அவர்கள் அளித்த பஞ்சாங்கம் பற்றிய கருத்துரை அன்னாருக்கு நன்றி)  


December 23, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 6

பதிவு ... 7


(Pic : Thanks to wikipedia)


     சரி .. .  வாக்கிய, திருக்கணித முறைகளில் எவற்றை எடுத்துக் கொள்வது என்ற வாதத்தை முன் வைத்தால் 2 உதாரண நிகழ்வுகள் மூலம் திருக்கணித முறைதான் சரியானது என்பதை நாம் காண முடியும்.

     நிகழ்வு 1.  2003 May 7 ம் தேதி காலை 10.41 முதல் மாலை 04.03 வரை புதன், சூரியனைக் கடந்து சென்றது. இது வெறும் கண்களால் பார்க்க முடிந்த நிகழ்வு. இதனைப் பல்வேறு புகைப்படங்களும் தெளிவாகக் காட்டின. இந்த 5 மணி 22 நிமிட நேரத்தில் புதனானது, சூரியனின் மையப்பகுதியை மதியம் 01.22 க்கு கடந்து கொண்டு இருக்க வேண்டும். அதாவது இரண்டும் ஒரே பாகையில் இருக்க வேண்டும். Ephemeris படி சூரியனும், புதனும் பரணி 3 ஆம் பாதத்தில்  உள்ளார்கள். ஆனால் வாக்கிய முறையிலோ சூரியன் அசுவினி 3 லும், புதன் பரணி 1 லும் உள்ளனர்.
அந்த அபூர்வ நிகழ்வை காணுங்கள் (Thanks to youtube)


                                   


      நிகழ்வு 2.  அதேபோல் 08.06.2004 அன்று காலை 10.34 க்கு ஆரம்பித்து மாலை 05.02 வரை சுக்கிரன், சூரியனைக் கடந்து சென்றது. மொத்த நேரம் 06.மணி 28 நிமிடம். இதன் பாதி அளவு அதாவது மதியம் 01.58 க்கு சூரியனுக்கு மத்தியில் சுக்கிரன் இருப்பார். அதாவது ஒரே பாகையில் மிருகசீரிடம் 1 ல். ஆனால் வாக்கிய கணிதப்படி சூரியன் மிருகசீரிடம் 1 லும் சுக்கிரன் மிருகசீரிடம் 4 லும் உள்ளனர். அதாவது 10 பாகை வித்தியாசம் உள்ளது.

இந்த அபூர்வ நிகழ்வையும் காணுங்கள் (Thanks to youtube)




      2 படத் துளிகளைப் பார்த்தீர்கள் . . .

     கணித்து அறியப் பெற்ற திருக்கணித முறையே சரியான முறை என்பது தெளிவாகிறது அல்லவா?

தொடரும். . . .

December 20, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 5

பதிவு ... 6


(Pic : Thanks to google)

      மக்களிடமும் ஜோதிடர்களிடமும் நிலவும் இந்தப் பிரச்சனைக்கு அரசாங்கம் ஏதேனும் கூறி உள்ளதா என்று ஆராய்ந்தால்  . . . .
     இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஏறத்தாழ 30 வித பிரதேச நாட்காட்டிகள் உபயோகத்தில் இருந்தன. இவற்றை ஒன்று கூட்டி ஒரே நாட்காட்டியாக்க முடிவு செய்யப்பட்டு 1952 ல் Calender reform committee உருவாக்கப்பட்டது. இந்தக் கமிட்டியின் தலைவராக Prof.Megnad saha  வும், N.C.Lahari  போன்றவர்கள் உறுப்பினர்களாகவும் அதில் இடம் பெற்றிருந்தனர். இந்த கமிட்டி தனது அறிக்கையை 1955 ல் அரசாங்கத்திடம் அளித்தது.
     அந்த அறிக்கையில், சூரிய சித்தாந்தத்தில் உள்ள கணித முறைகள் தற்கால அறிவியல் உலக துல்லிய கணித அமைப்புக்கு ஒத்து வரவில்லை என்றும் சுமார் இரண்டு மணி நேரம் அவை வித்தியாசப் படுவதாகவும் கூறியுள்ளது.
     இதன் தொடர்சியாக 1957 ம் ஆண்டு முதல் இந்திய வானிலை ஆராய்சி இலாகாவினால் கிட்டத்தட்ட 14 மொழிகளில் ராஷ்ட்ரீய பஞ்சாங்கம் பிரசுரிக்கப் பட்டு வருகிறது. பஞ்சாங்க கணிதத்திற்கு நவீன விஞ்ஞான அறிவியல் அடிப்படை யினைக் கொண்டு ஊக்குவிப்பதே குறிக்கோளாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

தொடரும் . . . 

December 18, 2012

பஞ்சாங்கம் எது சரி ?- 4

பதிவு ... 5



(Pic: Thanks to  wikipedia)

இது இவ்வாறிருக்க . . .
     தற்போது ஜோதிட உலகில் பலரும் திருக்கணித முறையைப் பின்பற்றி வரும் நிலையில், பல நூற்றாண்டுகளாக வாக்கிய முறையைப் பின்பற்றிப் பலன் கூறி வந்தது தவறா என்ற கேள்வியும் இரண்டு முறைகளிலும் கணித்துப் பார்த்தால் சில சாதகங்களில் நட்சத்திர சாரங்களில் மாற்றம் வருகிறதே என்ற கேள்வியும் வராமல் இல்லை.
     அது மட்டுமின்றி ஜோதிடர்கள் பலன் கூறுவதற்குப் பராசரர் முறையை பின்பற்றி வரும் நிலையில், பராசரர் இந்த இருவேறு கணிதங்களுக்கும் இருவேறு பலன்களையா கூறினார்?
     ஆரம்ப காலத்தில் வானசாத்திரமும், ஜோதிட சாத்திரமும் ஒன்று கலந்தே இருந்தன. ஆனால், வான சாத்திரம் அறிவியல் வண்ணத்தைப் பூசிக்கொண்டு அஸ்ட்ரானமி (Astronomy) எனும்  விஞ்ஞானமாகி வளர்ந்து நிற்கிறது. ஜோதிடம் மட்டும், சமயம் என்னும் அமைப்பில் இணைந்து முன்னேற்றம் இன்றி எந்த கணிதம் சரி என்ற நிலையில் போராடி வருகிறது.    
     திருக்கோவில்களில் வாக்கியப் பஞ்சாங்க முறைகளிலேயே விரதாதி அனுஷ்டானங்களும் பூஜை முறைகளும் செய்து வரும் நிலையில், மக்களும் பெரும்பாலும் அதனையே பின் பற்றி வருகிறார்கள். சில ஜோதிடர்களும் எந்த கணிதத்தில் ஜாதகம் கணிக்கப்பட்டிருக்கிறது என்று கூடப் பார்க்காமல் ராசிகளையும் பெயர்சிகளையும் கொண்டே பலன்கள் கூறி வருவது வருந்தத்தக்கது.

தொடரும் . . .

December 16, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 3

பதிவு ... 4



     மேற் கூறிய வாக்கிய முறையினின்றும் மாறு பட்டு தெளிவான கணித முறையில் உருவானது திருக்கணித முறையாகும்.
த்ருக் என்றால் பார்வை என்று பொருள். அதாவது கோள்களை நமது கண் களால் பார்த்து கணித்து அறியப் பட்ட முறையே திருக்கணிதம் என்கிறோம்.   
        கோள்களை காண தொலைனோக்குக் கருவியை 1610 ஆம் ஆண்டு கலிலியோ கண்டு பிடிக்கிறார்.
     ஆங்கிலேயர்களால் 1766 ஆம் ஆண்டு, முதன்முதலில் நாட்டிகல் அல்மனாக் (Nautical Almanac) என்னும் Ephemeris வெளியிடப்பட்டது. அதன் பின் 1819 ல் ரபேல்ஸ் அஸ்ட்ரானமிகல் எபிமெரிஸ்  (Raphael’s Astronomical ephemeris) வெளி வந்தது. இந்தியாவில் 1869 ஆம் ஆண்டு Gupta press- directory panchanka from kolkatta பெங்காலி மொழியில் வெளி வந்ததாக சான்றும் உள்ளது.
     கி.பி.1890ல்  Indian Calendric system என்ற புத்தகத்தில் Ketkar என்பவர் Jyotir ganitha என்ற எபிமெரிஸ் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆக, இந்தியாவில் திருக்கணித முறையானது 18 ஆம் நூற்றாண்டில் தான் வந்திருக்கக் கூடும் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.
     தற் சமயம் திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் அனைத்து எபிமெரிஸ்களையும் NASA  வின் LE 405 JPL கொடுக்கும் கோள் நிலையைக் கொண்டே  பயன்படுத்தி வருகிறோம். 

தொடரும் . . . 


December 15, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 2

பதிவு ... 3


(Pic : Thanks to google)

     சூரியன், சந்திரனின் நிலைகளைக் கொண்டு பஞ்சாங்கங்கள்   சூரிய சித்தாந்த முறையில் கணிக்கப்பட்டன.  இந்த பஞ்சாங்கம் ஒரே அமைப்பில் இருந்திருந்தால் எந்தக் குழப்பமும் இல்லாமல் இருந்திருக்கும் ஆனால் வாக்கியக் கணிதமுறை ஏற்படுத்தப்பட்ட பின் நிறைய குழப்பங்களும் ஏற்படத் தொடங்கின என்றே கூற வேண்டும்.
     ஆனால் வாக்கியப் பஞ்சாங்க முறை எப்போது எவரால் உருவாக்கப்பட்டது என தெளிவாக அறிய முடியவில்லை. 
     பண்டைய சூரிய சித்தாந்த முறையில் வான சாத்திர கணிதம் செய்ய அதிக அளவில் எண்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. எண்களை நினைவில் வைத்துக் கொள்வது கடினம் என்ற நிலையில் பாடல்களாக அவற்றை வடித்தெடுத்தனர். இதுவே வாக்கியக் கணிதமாகும். 
இதில் 248 வாக்கியங்களும் சில சூத்திரங்களும் இடம் பெற்றுள்ளன.  இந்த 248 வாக்கியங்கள் மற்றும் அதற்கு உண்டான திருத்தங்கள் பற்றிய தகவல்களை  தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகம் வெளியிட்ட வீமேசுவர உள்ளமுடையான், மற்றும் சூடாமணி உள்ளமுடையான் போன்ற நூல்களில் காணலாம். இந்த நூல்கள் இயற்றப்பட்ட காலம் கி.பி.1278 ஆக இருக்கலாம் என அதில் கூறப் பட்டுள்ளது.         
     T.S.குப்பண்ண சாஸ்திரி என்பவர் எழுதிய Hindu Astronomy என்ற நூலில் தமிழ்நாட்டில் கி.பி.13 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு.சுந்தர்ராஜா என்பவர் வாக்கியகரணம் என்னும் வாக்கிய கணித முறையை உருவாக்கி உள்ளதாகவும், கேரளாவில் திரு.ஹரிதத்தா என்பவர் பஞ்ச போத கரணங்கள் என்னும் பரஹித வாக்கிய முறையை உருவாக்கியதாகவும் கூறப்பட்டுளது.
     இந்திய வானசாத்திரத்தில் 18 சித்தாந்தங்கள் இருந்துள்ளன. 
அவற்றை 18 ரிஷிகள் உருவாக்கியுள்ளனர். இச்சித்தாந்தங்கள் அனைத்தும் தற்பொழுது கிடைக்கப் பெறவில்லை.
     இந்திய சோதிட சாத்திரத்தில் முதன்மையானவர் வராகமிகிரர்.(கி.பி.587)
     மேற் கூறிய 18 சித்தாந்தங்களில் 5 சித்தாந்தங்களை தழுவி பஞ்சசித்தாந்திகா என்னும் வான சாத்திர நூல் அவரால் எழுதப்பட்டது. 
அதில் சூரிய சித்தாந்தமே சரியானது என்ற கருத்தைக் கூறியுள்ளார்.

தொடரும் . . . 

பஞ்சாங்கம் எது சரி ? - 1

பதிவு ... 2

வாக்கியம் திருக்கணிதம் ஒரு ஒப்பீடு



   
                        (Pic : Thanks to google) 
   மனிதனுக்குப் பகுத்தறியும் அறிவு தோன்றியதிலிருந்து இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளையும், சம்பவங்களையும் இணைத்து காணக் கூடிய  சகுனம் பார்க்கும் முறையே ஜோதிடத்தின் ஆரம்பம் எனலாம்.
பழங்காலத்தில் அறிவியல் சாத்திரமாகத் தோன்றியது வான சாத்திரமாகும். இந்தியாவின் ஜோதிட வளர்ச்சி என்பது பண்டைய வேத காலம் முதற்கொண்டு தொடங்கியது. இவ் வேதகாலம் என்பது கி.மு.2000 என்று கூறப்படுகிறது.
இக்கால அமைப்பில் ஏற்பட்டது தான் நான்கு வேதங்கள். வேதங்களை உருவாக்கும் போது காலத்தைப் பற்றி அறிய வான சாத்திரத்தை உருவாக்கினார்கள் இதுவே இந்து சமய வேதத்தில் உள்ள ஜோதிட சாத்திரமாகும்.
     இந்த வேதங்களில் உள்ள ஜோதிஷம் என்பது வான சாத்திரத்தைப் பற்றி மட்டும் தான் கூறுகிறதே தவிர தனி மனிதனுடைய வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றியோ அல்லது சாதக சாத்திரம் பற்றியோ குறிப்பிடவில்லை. வேத ஜோதிடத்தில் மட்டுமல்லாமல் கி.மு.900-ல்
உருவாக்கப்பட்ட வேதாங்க ஜோதிடத்திலும் சமயச் சடங்குகள் நிறைவேறுவதற்குரிய காலங்களை கண்டு பிடிப்பதற்குத் தான் வானசாத்திரம் பயன்படுத்தப்பட்டது
     வான சாத்திரத்தில் சூரியன் முதலான ஏழு கோள்களையும் வெறும் கண்களால் கண்டு பிடித்து அவற்றிற்கு பெயர் சூட்டினர். நட்சத்திரக் கூட்டங்களை அடையாளப்படுத்தி பன்னிரு ராசி மண்டலங்களாக உருவாக்கப்பட்டது

தொடரும் . . .



என்ன எழுதப் போகிறேன் ?

பதிவு  ... 1


(Pic : Thanks to google)
வணக்கம்

Astromaster 05 வலைத்தளத்திற்கு வரவேற்கிறேன். இங்கு என்ன எழுதப் போகிறேன். 
எதுவானாலும் அது சுவாரஸ்யமான் பதிவாகத்தான்  நிச்சயம் இருக்கும். அதுவும் 90 % ஜோதிடம் பற்றியதாகத்தான்  இருக்கும்.

முதலில் சில கேள்விகள் . . . 

1.ஜோதிடம் உண்மையானதா ?

2.ஜோதிடம் அறிவியல் ரீதியானதா ?

3.ஜோதிடம் தோன்றியது எப்போது ?

4.ஜோதிடத்தினால் 100 % சரியான பலன்களை சொல்ல முடியுமா ?

5.ஜோதிட பரிகாரங்கள் பலன் அளிக்குமா ?

நிறைய விஷயங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முகங்களைக் காட்டி வருவது ஜோதிடத்தின் தன்மை அப்படி யென்றால் ஜோதிடம் குழப்பமானதா ? 
இல்லை ...
பலரும் அதில் நிறைய விஷயங்களை சேர்த்து குழப்பமானதாக மாற்றி   விட்டார்கள். ஜோதிடம் என்றைக்கும் தெளிந்த தன்மையுடன் தெளிவான வழிகாட்டியாகத்தான் இருக்கிறது.

நிறைய பேசப்போகிறோம் உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்