December 15, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 2

பதிவு ... 3


(Pic : Thanks to google)

     சூரியன், சந்திரனின் நிலைகளைக் கொண்டு பஞ்சாங்கங்கள்   சூரிய சித்தாந்த முறையில் கணிக்கப்பட்டன.  இந்த பஞ்சாங்கம் ஒரே அமைப்பில் இருந்திருந்தால் எந்தக் குழப்பமும் இல்லாமல் இருந்திருக்கும் ஆனால் வாக்கியக் கணிதமுறை ஏற்படுத்தப்பட்ட பின் நிறைய குழப்பங்களும் ஏற்படத் தொடங்கின என்றே கூற வேண்டும்.
     ஆனால் வாக்கியப் பஞ்சாங்க முறை எப்போது எவரால் உருவாக்கப்பட்டது என தெளிவாக அறிய முடியவில்லை. 
     பண்டைய சூரிய சித்தாந்த முறையில் வான சாத்திர கணிதம் செய்ய அதிக அளவில் எண்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. எண்களை நினைவில் வைத்துக் கொள்வது கடினம் என்ற நிலையில் பாடல்களாக அவற்றை வடித்தெடுத்தனர். இதுவே வாக்கியக் கணிதமாகும். 
இதில் 248 வாக்கியங்களும் சில சூத்திரங்களும் இடம் பெற்றுள்ளன.  இந்த 248 வாக்கியங்கள் மற்றும் அதற்கு உண்டான திருத்தங்கள் பற்றிய தகவல்களை  தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகம் வெளியிட்ட வீமேசுவர உள்ளமுடையான், மற்றும் சூடாமணி உள்ளமுடையான் போன்ற நூல்களில் காணலாம். இந்த நூல்கள் இயற்றப்பட்ட காலம் கி.பி.1278 ஆக இருக்கலாம் என அதில் கூறப் பட்டுள்ளது.         
     T.S.குப்பண்ண சாஸ்திரி என்பவர் எழுதிய Hindu Astronomy என்ற நூலில் தமிழ்நாட்டில் கி.பி.13 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு.சுந்தர்ராஜா என்பவர் வாக்கியகரணம் என்னும் வாக்கிய கணித முறையை உருவாக்கி உள்ளதாகவும், கேரளாவில் திரு.ஹரிதத்தா என்பவர் பஞ்ச போத கரணங்கள் என்னும் பரஹித வாக்கிய முறையை உருவாக்கியதாகவும் கூறப்பட்டுளது.
     இந்திய வானசாத்திரத்தில் 18 சித்தாந்தங்கள் இருந்துள்ளன. 
அவற்றை 18 ரிஷிகள் உருவாக்கியுள்ளனர். இச்சித்தாந்தங்கள் அனைத்தும் தற்பொழுது கிடைக்கப் பெறவில்லை.
     இந்திய சோதிட சாத்திரத்தில் முதன்மையானவர் வராகமிகிரர்.(கி.பி.587)
     மேற் கூறிய 18 சித்தாந்தங்களில் 5 சித்தாந்தங்களை தழுவி பஞ்சசித்தாந்திகா என்னும் வான சாத்திர நூல் அவரால் எழுதப்பட்டது. 
அதில் சூரிய சித்தாந்தமே சரியானது என்ற கருத்தைக் கூறியுள்ளார்.

தொடரும் . . . 

No comments: