February 8, 2013

ஜோதிடத்தின் பாதை - 4

பதிவு – 13




     வேதத்தின் அங்கம் என்று ஜோதிடத்தைப் பற்றி கூறும் அதே சமயம், அதனுடைய மற்ற அங்கங்கள் என்ன என்றும் தெரிந்து கொள்ளுவோம்.
வேதங்களுடைய அங்கங்கள் மொத்தம் 6 ஆகும்.

1.சிட்சை : (Phonetics) எழுத்து இலக்கணம், மற்றும் மந்திர உச்சாடணை முறைகளைப் பற்றி கூறுவது.

2.வ்யாகரணம் : (Grammer) மந்திரச் சொற்களின் இலக்கணம் பற்றிக் கூறுவது.

3.சந்தஸ் : (Prosody) செய்யுள் இலக்கணம்.

4.நிருக்தம் : (Etymology) மந்திரங்களின் வேர் போன்ற மூலச் சொற்களைப் பற்றிய வரலாறு.

5.ஜோதிஷம் : (Astronomy) (இது  நம்ம மேட்டரு.) வான சாத்திரம் பற்றியும், மந்திர உச்சாடனை செய்யும் காலம் பற்றியும் எடுத்துக் கூறுவது.

6.கல்பம்: (Rituals) சமயச் சடங்கு முறைகள் பற்றியும், சடங்கு மந்திரங்கள் பற்றியும் விளக்குவது.

     வேதத்தில் உள்ள ஜோதிடக் க்ருத்துக்கள் வேதாங்க ஜோதிடத்திலும் பிரதிபலிக்கின்றன.
     ருக், யஜூர் வேத கருத்துக்கள் யாஜூஸ்ரீ ஜோதிடம் எனவும், அதர்வண வேத கருத்துக்கள் அதர்வண ஜோதிஷம் என்றும் அழைக்கப்படுகின்றன.
     வேதங்களை ஏற்படுத்தும் போது, இப்போது எழுதி வைப்பது மாதிரி எழுதவெல்லாம் முடியாது. மனனம் தான். குருகுலத்தில் காலை முதல் மாலை வரை அதே வேலைதான்.
     இந்த இந்து சமய வேதத்தில் ஜோதிஷம் என்பது வான சாத்திரத்தைப் (Astronomy) பற்றி மட்டும் தான் கூறி வந்துள்ளது. தனி மனித வாழ்வு அல்லது சாதக சாத்திரம் பற்றியெல்லாம் (Astrology) சொல்லப்படவில்லை.
     சென்ற பதிவில் வேத காலம் என்பது பற்றி கூறியிருந்தேன்.  கி.மு 4000 மாக இருக்கலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் பாலகங்காதரத் திலகரை அறிவீர்களா ? ஆமாம் ஐயா, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர் தான்.  அவர் ஒரு புத்தகத்தில் வேதகால பூர்வ யுகம் என்பது கி.மு.10000 க்கு முன் என கூறி இருக்கிறார்.
     இன்னொரு ஆராய்ச்சியாளர் K.N.Rao  சொல்றத கேளுங்க வேத யுகம் என்பது கி.மு.23750 என்கிறார்.
     இதையெல்லாம் படித்துப் பார்த்தால் வரலாறுக்கு ஏது சார் வரையறை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நம்ம புராணங்கள் கட்டுக் கதைகள் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இந்த காலக் கணக்குகள் சில வழிமுறைகள் இதையெல்லாம் காணும் போது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை தான்.
     யுகக் கணக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
     ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 மானிட ஆண்டுகள்
     இதை . . .
     கிருத யுகம்     = 17,28,000  ஆண்டுகள்
     திரேதா யுகம்.   = 12,96,000  ஆண்டுகள்    
     துவாபர யுகம்   = 08,64,000  ஆண்டுகள்
     கலி யுகம்.      = 04,32,000  ஆண்டுகள் என பிரித்து உள்ளார்கள்.
     கலியுகம் x 2 = துவாபர யுகம்
     கலியுகம் x 3 = திரேதா யுகம்
     கலியுகம் x 4 = கிருத யுகம்

     மேலே சொன்ன அந்த 43,20,000 வருஷத்தை 1 சதுர் யுகம்னு சொல்லலாம்.

     இப்படியே 72 சதுர்யுகம் சேர்ந்தால் ஒரு மன்வந்தரம்.

     14 மன்வந்தரம் சேர்ந்தது ஒரு கல்ப காலம். இது தான் பிரம்மாவுக்கு ஒரு பகலாம். இதே போல் இரவும்.
     அதாவது 28 மன்வந்தரம் = பிரம்மாவுக்கு 1 நாள்.
     இப்படியே கணக்கு போட்டுட்டு வாங்க பிரம்மாவுக்கு இப்ப 51 வயசு. அவரோட மொத்த ஆயுள் 100.

     இப்போ நம இருக்கறது 27 வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வ்ந்தரத்தில்.

     என்ன கணக்குப் போட்டு பாத்திட்டீங்களா ?
     . . . . .
     என்னது...? நான் போட்டு சொல்லணுமா..... ?

     வடிவேலு பாஷையில் சொல்லட்டுமா . . .
     ஆணியே புடுங்க வேணாம் ஆள வுடுங்க சாமி.
     ஒரு கதை ஞாபகத்துக்கு வருது.
     இப்படித்தான் பேராசை பிடித்த ஒருத்தன் பிரம்மா கிட்ட வரம் கேக்கறதுக்காக தவம் பண்ணிக்கிட்டு இருந்தான். பிரம்மாவும் அவன் எதிர்ல வந்தார்.
     என்னப்பா வரம் வேணும்” அப்படின்னு கேட்டார்.
     சாமி உங்களுக்கு பலகோடி வருஷம்லாம் ஒரு நாள் மாதிரியாமே... அப்படியா சாமி"
     ஆமாம்பா... உனக்கு என்ன வேணும்னு கேளு
     அப்ப பலகோடி ரூபால்லாம் ஒரு ரூபா மாதிரிதான் இல்ல சாமி
     பிரம்மாவுக்கு பொறுமையே போயிடுச்சி.
     ஆமாம்பா... உனக்கு என்ன வரம் வேணும்னு கேளு
     உங்க கிட்ட என்ன சாமி பெரிசா கேக்கப் போறேன். உங்க கணக்குபடி ஒரு ரூபா கொடுங்க போதும்
     பிரம்மா பார்த்தார். 
     அவன பாத்து சிரிச்சிக்கிட்டே 
     சரிப்பா . . .  தரேன். ஆனா ஒரு  நாள் பொறு அப்படின்னார்.


பயணம் தொடரும் . . .
     

No comments: